சமையல் துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல சமையல் கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் உலகளாவிய உணவு, விருந்தோம்பல், சுற்றுலா சாதனைகள் 2021 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல இந்திய சமையல் கலைஞரான செஃப் தாமு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமையல் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருதாகும். மேலும் இது உலக தமிழ் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரித்தானியா நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்றது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் செஃப் தாமு பதிவிட்டுள்ளார். அதில் ‘லண்டனில் விருது பெற்றதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனது பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். குறிப்பாக உணவு வழங்கல் துறையில் செஃப் தாமு அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர்.
இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றதோடு 3 முறை கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.