லண்டனில் இளம்பெண்ணை கடத்தி செல்ல முயன்ற 50 வயது நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டனில் Tottenham பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4.43 மணியளவில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அங்கு 50 வயதான நபர் ஒருவரும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் இளம்பெண்ணை நோக்கி முதியவர் வந்துள்ளார். மேலும் அருகில் வந்த முதியவர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். அதோடு தன்னுடன் கூட வரும்படி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
இதனால் அந்த பெண் சாதுர்யமாக அங்கிருந்து ஓடியதால் 50 வயது நபரிடம் இருந்து தப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் காவல்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணுக்கு உடல் ரீதியாக எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் தவறாக பேசிய நபரால் மனதளவில் மிகவும் வருத்தப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 50 வயது நபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அதோடு அந்த நபர் பெண்ணிடம் பேசும் போது கைவிலங்கு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரை தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரணைகள் நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் முயற்சியை நேரில் பார்த்த சாட்சிகள் யாரேனும் இருந்தால் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவித்துள்ளனர்.