கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது :
தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம். உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வினியோகம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
காய்கறி விலையேற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காற்கறிகளை நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கை. தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4500 வாகனங்கள் மூலம் 2500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.