தூத்துக்குடி மாவட்டத்தில் நிவேஷ் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் உள்ள முனி கிருஷ்ணா பகுதியில் வெங்கடேஷ் மற்றும் பாண்டிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கரையாச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான விநியோக உரிமையை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொடுப்பதாக கூறினார்கள். இதனால் 25 லட்ச ரூபாயை நான் அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் எனக்கு மின்சார இரு சக்கர வாகன விநியோக உரிமையை தரவில்லை.
அது மட்டுமின்றி நான் கொடுத்த பணத்தில் 8 லட்ச ரூபாயை மட்டுமே திரும்ப கொடுத்தனர். நான் மீதமுள்ள 17 லட்சம் ரூபாய் பணத்தை நான் பலமுறை அவர்களிடம் கேட்டும் திரும்பத் தரவில்லை. இதன் காரணமாக அவர்களுடைய வீட்டிற்கு நேரில் சென்று எனக்கு தர வேண்டிய பணத்தை திரும்ப கேட்டபோது கணவன்-மனைவி இருவரும் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டிலட்சுமி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.