வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு வசதியாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் போலியான வேலைவாய்ப்புகள் மற்றும் மோசடி கும்பல்களிடம்சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரவாசி பாரதிய சஹயேதா கேந்திரா நல மையம் சார்பில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தசெயலியை, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். செயலி மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளலாம்.
வெளிநாடுகளில் செயல்படும் நிறுவனங்களில் வேலை தேடுபவர்கள் மற்றும் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் இருந்துகொண்டே உண்மையான வேலைவாய்ப்புகளை சரிபார்த்துக்கொள்ளவும், மோசடிகளை தவிர்க்கவும் இந்த செயலி உதவும். தற்போது வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், மோசடிகளை ஒழிக்கவும், சரியான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த செயலி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.