கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிப்பேன் என்றும், அந்த நேரத்தில் நான் போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் மணப்பெண் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். அதோடு சாட்சிக்கு 2 பேரும் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ரகு மற்றும் அர்ச்சனா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றதாக கூறும் நிலையில், ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணுக்கு அந்த பத்திரத்தை பரிசாக கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரகுவின் நண்பர்கள் இந்த பத்திரத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.