காரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன கம்பெனிக்கு லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் லாரியில் சரக்குகளை ஏற்றி முடித்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்க சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். அப்போது தூக்கக்கலக்கத்தில் இருந்த வீரமணி லாரியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் வீரமணி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரமணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.