லாரியில் சட்டவிரோதமாக அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்தி சென்றவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் பங்காருபேட்டை பகுதியில் வசிக்கும் கோபி, பாலு மற்றும் சென்னை பகுதியில் வசிக்கும் அரிசி உரிமையாளரான பிரபு என்பதும், அவர்கள் அந்த அரிசி மூட்டைகளை கர்நாடகா மாநிலத்திலுள்ள பங்காருபேட்டைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 31 டன் எடையுள்ள அரிசி மூட்டைகள், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிசி மூட்டைகளை எந்த ரேஷன் கடையில் வாங்கினார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.