இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் முத்துக்குமாருக்கும், மற்றொரு லாரி டிரைவரான சந்தோஷ் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமார், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.