லாரி டிரைவரை தாக்கிய மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி நகை போன்றவற்றை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் சந்தோஷ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செந்துறையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இவருடன் சுமை தூக்கும் தொழிலாளி சுந்தர்ராஜ் மற்றும் கிளீனர் முருகேஷ் போன்றோர் சென்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தி விட்டு அவர்கள் ஓய்வு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தோஷ் அதிகாலை லாரியில் இருந்து கீழே இறங்கிய போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இருட்டில் அவரை தாக்கி அவரிடம் இருந்த வெள்ளி கை சங்கிலி மற்றும் 40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து சந்தோஷ் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.