லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து ஒரு லாரி தார் லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியிலிருந்து பனியன் சரக்கு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி மற்றொரு லாரி வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து பனியன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தார் லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால் தார் லோடு லாரியின் பின் பகுதி பயங்கரமாக உடைந்து அதிர்லிருந்த தார் பின்னால் மோதிய லாரி டிரைவரின் உடல் முழுவதும் கொட்டியது.
இந்த விபத்தில் பனியன் சரக்கு ஏற்றி வந்த லாரியின் டிரைவரான திருப்பூர் பகுதியில் வசிக்கும் கவியரசன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலுள்ளவர்கள் அவினாசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவியரசின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.