உள்ளாட்சி தேர்தலுக்காக லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட எரிசாராயத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுச்சேரியிலிருந்து மரக்காணம் வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரி ராதிகா தலைமையிலான குழுவினர் முருக்கேரி பெட்ரோல் பங்க் சந்திப்பு பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது லாரியில் ரகசியஅறை கட்டமைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் ரகசிய அறையினுள் சென்றுச் சோதனை செய்தபோது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2100 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் லாரி ஓட்டுனரைக் கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் சதீஷ் என்பதும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்கினைப் பெறும் நோக்கில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எரிசாராயத்தைக் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.