சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புக் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பஞ்சலிங்கபுரம் அருகில் ஆரியன் காட்டுப்புதூர் என்ற இடத்தில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. இங்கு அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் நுழைவு பாலத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பாலத்திற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த லாரி ஆரியன் காட்டுப்புதூர் நுழைவு வாயிலை கடந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளில் லாரி சிக்கிக் கொண்டதால் அதனை டிரைவரால் அதற்கு மேல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து லாரி நடு ரோட்டிலேயே நின்றதால் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். அதன் பின் அங்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பிகளை உடைத்து லாரியை வெளியே கொண்டு வந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மலையம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.