சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியில் 20 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சாலையோரப் பள்ளத்தில் மணலில் புதைந்து லாரி சிக்கி நின்றது. அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதாக நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி வரும் போது லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால் டிரைவர் லாரியை அங்கேயே விட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் கடத்தி வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.