லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் உஷா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி உஷாவின் வீட்டிற்கு அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் விஸ்வநாதனின் நண்பன் கலைஞனும் வந்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுனர் மணிகண்டன் புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து “இது எங்க ஏரியா உள்ள வராதே” என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் இடது காதில் பலமாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் . இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான விஸ்வநாதன் மற்றும் கலைஞனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.