கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார்.
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை நாடுகள் அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்த கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோய்களை கண்டறிவது வரும் முன் தடுப்பது போன்றவற்றை செய்ய தவறுவதால் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு நாடும் வலுவான சுகாதார அமைப்பை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், 25 மில்லியன் N-95 முகக்கவசங்கள் செயற்கை சுவாச கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்ப வேண்டி இருப்பதாக கூறிய டெட்ராஸ் இதற்காக 7,47 விமானங்கள் 8 நடுத்தர ரக சரக்கு விமானங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயணிப்பதற்கான 8 சிறிய ரக பயணிகள் விமானங்களை ஈடுபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனாவால் 17.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது.