உலக நாடுகளில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) கடைதான் மெக்டொனால்ட்ஸ் உணவகம். இந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தலைமை செயல் அலுவலரான ஈஸ்டர் ப்ரூக்கை, நிறுவன தலைமைக் குழு அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இவரை விலக்கியுள்ளது.
இவருக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமோ, தொடர்போ கிடையாது என நிறுவன தரப்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1993 முதல் மெக்டொனால்ட்ஸில் பணியாற்றிவந்தவர் ப்ரூக். இந்நிறுவனத்தின் வரைமுறைகளின்படி, ‘ஊழியர்களுடன் எந்தவிதமான உறவும் வைத்திருத்தல் கூடாது. அப்படி இருந்தால் அது நிறுவன வரையறைப்படி குற்றமாகும்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இவர் மீது ஊழியர் ஒருவருடன் சில ஆண்டுகளாக உறவிலிருந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து நிறுவனத் தலைமைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய தலைமைச் செயல் அலுவலராக கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இம்மாதிரியான உணவகங்களுக்குப் பல தரப்பில் வலுவான போட்டிகள் உலகளவில் காணப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழல்களைக் கடந்து, நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்து, அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர் ஈஸ்டர் ப்ரூக் என்பது குறிப்பிடத்தக்கது.