லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார்.
கேரள மாநிலத்தில் உள்ள நந்தி லைட் ஹவுஸ் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கடையில் 22 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அதிலிருந்த ஒரு லாட்டரி சீட்டு இருக்கு 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முகமது சையத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு, இந்த பரிசு கிடைத்துள்ளதால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோயிலண்டி காவல் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளுடன் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை சந்தித்து தனக்கு 80 லட்சம் பரிசு கிடைத்துள்ளதால் மர்ம நபர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என கூறியுள்ளார். எனவே பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். இதனையடுத்து போலீசார் அருகில் உள்ள வங்கிக்கு மறுநாள் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து முகமது கூறும்போது, தனது குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக இந்த பணத்தை உபயோகப் படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.