Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயம் தாமரை மலரும்…. ”யாராலும் தடுக்க முடியாது”….. வானதி சீனிவாசன்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக கட்சியினரின் ஆதரவுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணியை கட்சியின் தேசியச் செயலாளர் சுனில் தியோதர் தொடங்கி வைத்தார். இதில் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சியின் மகளிர் அணியினர், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்திய மக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. ஆனால், திமுக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து திட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளும் பொய் பரப்புரைகளை முறியடித்து உண்மையைத் தெரிவித்திடும் வகையில் இந்த ஆதரவுப் பேரணி நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தாமரை மலர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

Categories

Tech |