அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் வசித்து வருபவர் வேல்தேவர். இவருக்கு சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பழைய பேட்டை பகுதியில் உள்ள பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மனைவி உயிரிழந்ததால் அவருடைய மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரரான இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் மேகலா ஆகியோர் செய்து கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மூத்த மகன் காளிராஜ் என்பவருக்கும், இசக்கிமுத்துவின் மகள் மேகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து அண்ணன் மற்றும் தங்கை உறவு கொண்ட இருவரும் காதலிப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் இரு குடும்பத்தினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டுக்கு முன் தன் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் இருவரும் நெல்லை பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அருகே வசித்து வந்துள்ளனர். கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை செய்து வந்த காளிராஜ் வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் 10ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை வழி மறித்த மர்ம நபர்கள் சராமரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காளிராஜன் மனைவி மேகலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மர்ம கும்பல் மேகலாவையும் கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மேகலாவை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்த மேகலா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மணிமேகலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.