ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
ஈரான் நாட்டில் உள்ள தலைநகரான தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு அணிவித்தார்.
இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து இருந்தனர். இதனை கண்ட பொது மக்கள் கைதட்டியும், செல்போனில் போட்டோ எடுத்தும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இஸ்லாமிய சட்டத்தின் படி பொது இடத்தில் திருமணமாகாத ஆணும், பெண்ணும் இவ்வாறு அத்துமீறி நடப்பது குற்றம் என்று கூறி காதல் ஜோடியை ஈரான் போலீசார் கைது செய்தனர்.