இளைஞர்கள் சாதியை வெறுத்ததன் காரணமாகவே கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி கேட்கும் பொழுது இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளது.
இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மனம் விரும்பி கலப்புத் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு உரிய பாதுகாப்பை காவல்துறையினர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் கலப்பு திருமணம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது என்றும், சாதி என்ற ஒன்றை முற்றிலும் அழிக்கக் கூடிய சக்தியாக கலப்புத்திருமணம் திகழ்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் சாதி பிடியில் இருந்து வெளியே வர நினைப்பதால்தான் கலப்பு திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்றும் இத்தகைய செயல்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.