காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இளையபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(25) என்ற மகன் உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், விஜயலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய விஷ்வா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஈரோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்த விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்து விஜயலட்சுமி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருகிய நிலையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.