மகள் விஷம் குடித்ததால் தாய் மற்ற குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரியா, திரிஷா என்ற 2 மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியா அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்ற வாலிபரை காதலித்துள்ளார். இது குறித்து அறிந்த மகாலிங்கம் அம்சவேணி ஆகிய இருவரும் பிரியாவுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்த மாதம் நடைபெற உள்ள திருமண அழைப்பிதழை அச்சடித்து பிரியாவின் பெற்றோர் உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில் தனது காதலியான பிரியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற போவதை அறிந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தனது காதலன் தற்கொலைக்கு முயற்சி செய்ததை அறிந்த பிரியாவும் தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார்.
அதன்பிறகு மயங்கிய நிலையில் கிடந்த பிரியாவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அம்சவேணி பெங்களூருவில் இருந்து தனது கணவர் வருவதற்கு முன்பாகவே குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றிற்கு சென்ற அம்சவேணி தனது மகள் மற்றும் மகன் விஷ்ணுவுடன் தண்ணீரில் குதித்து விட்டார். அப்போது அதிர்ஷ்டவசமாக திரிஷா அங்கிருந்த குழாயை பிடித்து உயிர் தப்பி விட்டார்.
ஆனால் அம்சவேணி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மறுநாள் காலை திரிஷா கிணற்றிலிருந்து எப்படியோ மேலே ஏறி வந்து நடந்த சம்பவத்தை கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவேணி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.