உக்ரைனில் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க நினைத்த வினோத காதலர்கள், 123 நாளில் பிரிந்துவிட்டனர்.
உக்ரைனில் கார்கிவ் என்ற நகரில் வசிக்கும் அலெக்ஸாண்டர் குட்லே, வாகன விற்பனையாளராக உள்ளார். இவரும் விக்டோரியா புஸ்டோவிடாவா என்ற ஒப்பனை கலைஞரும் காதலித்துள்ளனர். எனவே சாதாரண ஜோடிகளை போல் இல்லாமல், இருவரும் காதலர்களாக சரித்திரத்தில் இடம்பெற தீர்மானித்துள்ளனர்.
அதன் படி, வித்தியாசமாக சிந்தித்து காதலர் தினத்தின் போது, அலெக்சாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கையையும் இணைத்து கைவிலங்கு போட்டுக்கொண்டனர். அதாவது நாமே நினைத்தாலும் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவே தங்களுக்குள் சிக்கலை உருவாக்கும் என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
அனைத்து இடங்களுக்கும் இருவரும் இணைந்தே சென்றிருக்கிறார்கள். ஒருவர் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் மற்றவர் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறாக செல்போன் பார்ப்பதில் தொடங்கி செருப்பு போடுவது வரை எல்லாவற்றையும் ஒன்றாகவே செய்திருக்கிறார்கள்.
இப்படி சுமார் 123 நாட்கள் வாழ்ந்து விட்டனர். அதன் பின்பு இருவருக்குமிடையே ஒத்துவரவில்லை. காதல் கசக்க, விலங்கை உடைத்துவிட்டு பிரிய முடிவெடுத்தனர். இதுபற்றி விக்டோரியா கூறுகையில், ஒரு நாளின் 24 மணிநேரமும் இருவரும் ஒன்றாகவே இருப்பதால் அவருக்கு என் மீது கவனம் இல்லை.
மேலும் “மிஸ் யூ” என்ற வார்த்தையை பயன்படுத்தவேயில்லை என்று கூறியிருக்கிறார். எனினும் அலெக்சாண்டர், எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இல்லை, விருப்பு வெறுப்புகள் வெவ்வேறாக இருப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் உடைத்த கைவிலங்கை ஏலத்தில் விற்று, வரும் பணத்தை வைத்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ளார்கள்.
தற்போது இவர்கள் பிரிந்து விட்டாலும் பிரபலமடைந்துவிட்டனர். கட்டி வைத்தாலும் பிரியும் உறவை இணைக்க முடியாது என்று தெரியப்படுத்திவிட்டது இந்த ஜோடி.