கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பீளமேடு பகுதியில் வசிக்கும் சூரிய பிரகாஷ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் 2 1/4 கிலோ கஞ்சா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது கடந்த 2 வருடங்களாக நர்சிங் படித்த வினோதினியும், பட்டதாரியான சூரிய பிரகாஷும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனியார் விடுதியில் தங்கியிருந்த வினோதினி பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து சூரிய பிரகாஷுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். அதன்பின் சூரிய பிரகாஷும், வினோதினியும் சேர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்களது பெயரை சூர்யா மற்றும் தமன்னா என்று மாற்றிக்கொண்டு கஞ்சா விற்பனை செய்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.