கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அமல்ராஜும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களது மகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர். இதனால் கிரானைட் நிறுவனத்தில் பணிபுரியும் தங்கராஜ் என்பவருக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது.
இது குறித்து அறிந்த அமல்ராஜ் ரஞ்சிதாவை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அமல்ராஜ் ரஞ்சிதாவின் கழுத்தை தாலி கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமல்ராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.