வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன.
தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாவட்ட மக்கள், வெட்டுக்கிளிகளால் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தமிழக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு படையெடுத்தால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வேளாண்துறை தெரிவித்துள்ளது. அதில்,
* வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தலாம்.
* மாலதியான் மருந்தினை, தெளிப்பான்கள், பெரிய ட்ராக்டர்கள், தீயணைக்கும் இயந்திரம் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
* உயிரியல் கட்டுப்பாட்டு காரணியாக மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
* வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
* அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஏற்கனவே, கொரோனா காரணமாக பொருளாதார அடிப்படையில் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மேலும் விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.