புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள களக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டு உபயோக பொருட்களான கிரைண்டர், டி.வி மற்றும் மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகுடி துணை மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மின்சார வாரிய பொறியாளர் முற்றுகையிட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.