காம்யானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் போலீஸ் அதிகாரி என பொய் கூறி பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த சாரதா சிர்சாட் என்ற பெண்ணிடம் அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் தன்னை போலீஸ்காரர் என அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருந்த உடமைகளை நோட்டமிட்டார். இதையடுத்து அந்தப் பெண் இறங்கும் இடம் வந்தவுடன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் கைப்பை மற்றும் செல்போனை வலுக்கட்டாயமாக பறித்த அந்த நபர் சத்தமிட்டால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதை எடுத்து காசாரா என்ற ஸ்டேஷன் வந்ததும் அங்கிருந்து குதித்து அவர் தப்பி சென்று விட்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் விசாரணை செய்த அதிகாரிகள் அந்த பெண்ணிடமிருந்து கைப்பை மற்றும் செல்போனை பறித்து சென்றது கல்யாண் மேற்கு மகரால் பகுதியை சேர்ந்த சோபன் என்பது தெரியவந்தது. அவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.