விபத்து ஏற்பட்ட வாலிபருக்கு முதலுதவி அளித்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் கோலியனூர் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பனங்குப்பம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் ராகவன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த விபத்தில் ஜெயக்குமாரின் இடது கால் எலும்பு முறிந்ததால் அலறி துடித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. லட்சுமணன் விபத்தில் சிக்கிய ஜெயகுமாரை பார்த்ததும் தனது காரை உடனடியாக நிறுத்த சொன்னார். இதனையடுத்து எம்.எல்.ஏ. எலும்பு முறிவு டாக்டர் என்பதால் அவரே ஜெயக்குமாரின் காலில் துணியை வைத்து கட்டி முதலுதவி செய்தார். அதன்பின் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஜெயக்குமாரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எம்.எல்.ஏ. லட்சுமணனை பாராட்டி வருகின்றனர்.