3 மாதங்களுக்கு திறக்கப்பட்ட சந்தையில் மாடுகள் 60 லட்ச ரூபாய்க்கு விற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரம் பகுதியில் 3 மாதங்களுக்கு பிறகு மாட்டு சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகளும், 125 இதே இன கிடாரி கன்றுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால் சந்தையில் ஏராளமான மக்கள் கூட்டம் கூடியது. மேலும் 50 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 150 இதே இன கன்றுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் முதன்முறையாக காங்கேயம் இன பசுவும், அதே இன காலை கன்றும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரையிலும், அதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ. 10000 முதல் ரூ. 20000 வரையிலும், விர்ஜின் கலப்பின கறவை மாடு ரூ. 30000 முதல் ரூ. 35000 வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ. 30000 முதல் ரூ. 40000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக மாடுகள் 60 லட்ச ரூபாயிற்கு விற்றதாக சந்தை நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் திருப்பூர், திங்களூர், காஞ்சிகோவில், அறச்சலூர், சென்னிமலை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர்.