சொந்த மாமனாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மெய்க்காவல்புத்தூர் மெயின் ரோடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் ஜெயந்தி திலக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயந்தி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு ஒரு வாரம் சென்ற நிலையில் திலக் தனது இரண்டு குழந்தைகளையும் ஆட்டோவில் செல்வராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனை அடுத்து திலக் ஜெயந்தியை தொலைபேசி மூலமாக அழைத்த போது அவர் அதை எடுத்து பதில் அளிக்கவில்லை. இதனால் நேரில் சந்திப்பதற்காக திலக் ஜெயந்தியின் தந்தை வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது யாரும் திறக்காத காரணத்தினால் அருகாமையில் இருந்த பிளாஸ்டிக் குழாயை எடுத்து கதவை உடைத்து திறக்க முயற்சி செய்துள்ளார். அந்த நேரம் செல்வராஜ் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது செல்வராஜிடம் திலக் தனது மனைவியை ஏன் திரும்ப அனுப்பி வைக்கவில்லை என கேட்டு திட்டி கையிலிருந்த குழாயால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த திலக் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் செல்வராஜை அவரின் மனைவி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு கதறி அழுத மனைவி கணவரின் உடலுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக தேவகி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து ஏற்கனவே வழக்கு பதிந்திருந்த நிலையில் திலக்கை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.