மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை ஒரு நாள் மட்டும் சதய விழா கொண்டாடப்பட உள்ளது.
மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல், பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் மட்டுமே நடைபெற உள்ளது. கோயிலில் வளாகத்திற்குள்ளேயே வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சதய விழாவிற்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.