மான் இறைச்சியை எடுத்துச்சென்ற வாலிபருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் கொண்டம்பல்லியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வனப்பகுதியில் பக்கெட்டுடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த வனத்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோட்டைச்சேரி கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் நாய்கள் கடித்து இறந்து கிடந்த மான் இறைச்சியை அருகிலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு எடுத்துச் சென்றது வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் மணிகண்டனிடம் இருந்து மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அதிகாரி பிரின்ஸ் குமார், உதவி வன பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் படி மான் இறைச்சியை எடுத்து சென்ற மணிகண்டனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.