இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவிகள் சேர்க்கை 2021-22ம் வருடத்தில் 20% ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (டிச..14) மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது.
இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தொழில்நுட்பக் கல்வியில் சேரும் 10,000 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இந்திய தொழில்நுட்பக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவிகளின் சேர்க்கையை மேம்படுத்த கூடுதலான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 2016ம் வருடம் 8% ஆக இருந்த மாணவிகளின் சேர்க்கை, 2021-22ஆம் ஆண்டு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 2021-22ம் வருடத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (என்ஐடி) மாணவிகளின் சேர்க்கை 22.1 % அதிகரித்துள்ளது.
ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற பாடப் பிரிவுகளில் மாணவிகளின் சேர்க்கையில் நிலையான முன்னேற்றம் இருக்கிறது. இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2016-17ம் வருடத்தில் 41,97,186ஆக இருந்த ஸ்டெம் படிப்புகளின் மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 43,87,248ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.