கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் 27 வயது பெண்ணும் இவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். அதன்பின் அந்தப் பெண் எம்.எஸ்.சி படிப்பதற்காக விடுதியில் தங்கி இருந்துள்ளார். பிறகு தன்னுடன் பயிலும் சக மாணவர்களுடன் சகஜமான முறையில் பேசி வந்துள்ளார். இதனை ஏற்க முடியாத நவீன்குமார் மாணவியிடம் சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்த நவீன்குமார் மாணவியை சந்திப்பதற்காக கல்லூரி விடுதிக்கு வந்து வாசலில் இருந்து தொலைபேசியில் மாணவி அழைத்துள்ளார்.
இதனையடுத்து முதலில் வெளியே வர மறுத்த மாணவி சற்று நேரம் கழித்து வெளியே வந்துள்ளார். அதற்குப் பிறகு இருவரும் பேசிய நிலையில் நவீன்குமார் தகாத வார்த்தைகளால் பேசி மாணவியிடம் தன்னுடன் பேசவில்லை என்றால் இறந்து விடுவேன் என கூறி விஷத்தை அருந்தியுள்ளார். இதனைப் பொருட்படுத்தாமல் மாணவி அங்கிருந்து சென்ற போது நவீன் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை கல்லால் அடித்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவர்களால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நவீன்குமாரை கைது செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது விசாரணைகள் முடிவடைந்த காரணத்தினால் நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அந்த தீர்ப்பில் கல்லூரி மாணவியை ஆபாச முறையில் பேசிய குற்றத்திற்காக வாலிபர் நவீன்குமாருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும் மற்றும் மாணவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.