மாணவியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தலீபான்களின் உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக கையாண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தலீபான்கள் ஆட்சி அமைப்பதால் பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிப் போகுமோ என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் தலீபான்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியதில், பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது, பேசுவது என்பது குறித்து எங்களின் படைகளுக்கு முறையான பயிற்சி அளிக்கும் வரை பெண்கள் தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். இதற்கிடையில் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, முகத்தை மறைக்கும் பர்தா அணிய வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்வதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தலீபான்கள் நியமித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மாணவி மாணவர்கள் என இருபாலரும் ஒன்றாக அமரக் கூடாது. மாணவிகள் தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். குறிப்பக மாணவிகளுக்கென்று தனி அறை ஒதுக்க வேண்டும். மேலும் ஆப்கான் பெண்களுக்கு படிப்பு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து படிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.