மாணவியை வழிமறித்து தவறாக நடக்க முயன்ற பீகார் வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் முகமது சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது சலாவுதீன் வசிக்கும் தெருவில் 15 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நடந்துசென்று வந்துள்ளார். இதனை முகமது சலாவுதீன் சில நாட்களாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமது சலாவுதீன் வீட்டின் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் வேகமாக சென்று மாணவியின் முன் நின்றுள்ளார். அதன்பின் முகமது சலாவுதீன் அந்த மாணவியின் ஆடைகளை அவிழ்த்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து முகமது சலாவுதீனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியிடம் முகமது சலாவுதீன் தவறாக நடக்க முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது சலாவுதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.