ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை என தலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளதை உலக நாடுகள் வரவேற்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அரசு பாராட்டை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மொத்த பரப்பளவில் வெறும் 5% மட்டுமே இருக்கும் காடுகளை பாதுகாக்கும் நோக்கோடு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது தான் இந்த வரவேற்பு காரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்துகுஷ் மலை தொடரில் அதிகமாக காடுகள் அமைந்துள்ளன.
அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களே அந்த காடுகளை பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மரங்களை வெட்ட மற்றும் அதன் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், மரங்களை வெட்டுவது விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், மாகாண அதிகாரிகள் இது போன்ற செயலை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.