இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்து விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.நாகூர் பாறைக்குழி பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பார்த்தவுடன் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இறந்த மாட்டின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 மாடுகளை ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.
அதில் ஒரு எருமை மாடு மட்டும் இறந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் இறந்த மாட்டின் உடலை புதைக்க அனுமதி கிடைக்காததால் தமிழகத்திற்கு வந்து அதனை வீசி செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக லாரி டிரைவருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறந்த மாட்டின் உடலை வேறு எங்காவது புதைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.