மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு காவல்துறையினர் மனு கொடுக்க வருபவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து திடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அந்த வாலிபரை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து நேசமணி நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாற்றுதிறனாளி வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் ஆரல்வாய்மொழி பகுதியில் வசிக்கும் கசமுத்து பாண்டியன் என்பது தெரிய வந்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது, தனது தாத்தாக்கு உரிய சொத்திலிருந்து மாற்றுதிறனாளியான வாலிபருக்கு ஒரு சதுர அடி கூட தராமல் உறவினர்கள் ஏமாற்றினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசமுத்து அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் உயிரை விடவும் தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாற்றுத்திறனாளி வாலிபரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுவை போட செய்தனர். அதன்பிறகு மாற்றுத்திறனாளி வாலிபரை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.