அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து அலுவலகத்தின் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பினர் தங்களின் சங்கம் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சிறுநாவலூர் கிளை தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றுள்ளார். பின்னர் மாவட்ட பொருளாளர் சாந்தி மற்றும் துணைச் செயலாளர் அஞ்சலி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டையை அனைவருக்கும் வழங்குமாறும், பின் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்குமாறும் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.