பிரான்சில் 3 வயது குழந்தையை அடித்து கொன்ற நபரின் செயலை மறைக்க முயன்ற தாய் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் என்ற நகரில் வாழும் கரோலின் லெட்டோயில் என்ற 19வயதுடைய பெண்ணுக்கு டோனி என்ற 3 வயது குழந்தை உள்ளது. குழந்தையை தனது காதலனான லோயிக் வண்டல் தாக்கியதால் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் நினைவிழந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கரோலின் உடனே அவசர உதவியை அழைத்து குழந்தை படியிலிருந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் அழைப்பில் இருப்பதை கவனிக்காமலேயே தன் காதலன் குழந்தையை தாக்கியதை மறைப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
ஆனால் அவர் பேசிய அனைத்தும் பதிவு செய்யப்படுவதை அவர் அறியவில்லை. மேலும் அவர் தனது காதலனிடம் குழந்தை மாடியில் இருந்து விழுந்து விட்டது என்று மருத்துவரிடம் கூறினேன் என்று கூறியுள்ளார். ‘படிக்கட்டுகள் ஓகேவா? அபார்ட்மெண்டுக்கு செல்லும் படிக்கட்டில் இருந்து அவன் விழுந்து விட்டான், நமக்குள் நடந்த விவாதங்களை எல்லாம் நான் மறந்துவிடுகிறேன் சரிதானே’ என்று கூறுவது பதிவு செய்யப்பட்டு விட்டது.
மேலும் மருத்துவக்குழுவினர் இவர் கூறியதை கேட்டுவிட்டு போலீசாருடன் அவரின் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் வண்டல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், தான் அடித்ததில் தான் குழந்தை இறந்து போனது என்று தெரிவித்தார்.
மேலும் வண்டல் குழந்தையை தாக்கியதை ஏன் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்று கரோலினிடம் நீதிபதி கேட்ட போது அவர் தனக்கு பயமாக இருந்ததாகவும், உதவி கோர விரும்பினேன் ஆனால் என்னால் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக வண்டல்லுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் கரோலின்க்கு குழந்தை தாக்குதலை மறைத்ததால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது.