மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பதற்காக சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக 100-க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒன்று கூடி வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் அனைவரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன்பேரில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு வாங்கி 5,000 தொழிலாளர்கள் மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர். அதில் வருகின்ற வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் உள்பட ஆறு தாலுகா பகுதிகளில் அரசு அனுமதி வழங்கி இருந்த மணல் குவாரிகள் ரத்து செய்துள்ளனர். இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து மாட்டுகளுக்கு தீவனம் வாங்க வழியில்லாமல் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும் வருகின்றனர்.
இது பற்றி பலமுறை மனு அளித்தும் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் மீண்டும் தங்களிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம் என தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதுமாக மாட்டுவண்டி தொழிலாளர்களை கணக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.