தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரான ரெங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதன் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இந்நிலையில் ரெங்கநாதன் நெல்லையிருந்து தூத்துக்குடிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ரெங்கநாதன் தனது மடிக்கணினியை பேருந்தில் உள்ள கேரியரில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மடிக்கணினி காணாமல் போனதை கண்டு ரெங்கநாதன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ரெங்கநாதன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்து குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்தப் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் ரெங்கநாதன் ஒரு கேரியரில் மடிக்கணினியை வைத்திருந்ததும், அதனை பேருந்தில் ஏறிய ஒருவர் பின் இருக்கையில் அமர்வது போல் அமர்ந்து நைசாக மடிக்கணினியை திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பிறகு காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் வெள்ளைச்சாமி தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த வெள்ளைச்சாமி நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அதன்பின் கோர்ட் உத்தரவின்படி வெள்ளைச்சாமி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வெள்ளைச்சாமியிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.