விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அதிக அளவிலான கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த கல் குவாரியிலிருந்து ஜல்லி கற்கள் மற்றும் செயற்கை மணல்கள் போன்றவை லாரியின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு லாரியை பயன்படுத்தி மணல்களை கொண்டு செல்லும் போது தூசிகள் பறக்காத வண்ணம் அதனை தார்பாய் கொண்டு மூட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றக் கூடாது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.