மதுபான கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும், விற்பனையாளராக சண்முகமும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருச்சிக்கு சென்றதால் சண்முகம் மட்டும் மதுபான கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.அதன் பின் மறுநாள் காலை மதுபான வந்த சண்முகம் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து சண்முகம் பரமத்தி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் முதலில் கடையில் புகுந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.ஆனால் அதனை உடைக்க முடியாததால் மேஜையில் இருந்த ஆயிரம் ரூபாயை மட்டும் திருடிச்சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மர்ம நபர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபான கடைக்குள் புகுந்து திருட முயற்சி செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.