சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 கட்டங்களாக இன்று மற்றும் 9- ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் நெல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிலர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கிராம பகுதிகளுக்கு கடத்திச் செல்வதாக நெல்லை மாநகர மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி நெல்லை மாநகர பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்திச் சென்றதாக தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து, சுடலை, முத்துக்குமார் மற்றும் பேச்சுமுத்து ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 137 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.