ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபர் மதுபோதையில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபுரம்புத்தூர் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் வைத்து மது குடித்துவிட்டு அதே ஆற்றில் குளித்துள்ளனர்.
இதனை அடுத்து குளித்து கொண்டிருக்கும் போது ஹரிஹரனுக்கு குடிபோதை அதிகமானதால் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவரது நண்பர்கள் ஹரிஹரனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.